உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒடேசா நகரம் முழுவதும் சின்னாபின்னமானது. இதில் ஒடேசா நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 18 பேர் மாயமாகினர் . இந்த ஆறு பேரில் ஒரு தாய் மற்றும் அவருடைய 3 மாத குழந்தையும் அடங்கும். முன்னதாக பலியான அந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருந்தபோது அந்த குழந்தையை தொட்டு பார்த்தவாறு எடுத்த புகைப்படமும், அந்த குழந்தை 3 மாத சிசுவாக இருக்கும்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
பெரும்பாலான உக்ரேனிய மக்கள் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் ஒரு மூன்று மாத பச்சிளம் குழந்தை தன்னுடைய பெற்றோருடன் முதல் ஈஸ்டர் தினத்தை கொண்டாட முடியாமல் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பலரது மனதையும் புண்படுத்தி உள்ளது. இந்த ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் தினத்திற்கு ரஷ்ய அதிபர் புதினால் உக்ரேனிய மக்களுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் இந்த ஏவுகணை தாக்குதல் என அரசியல் நோக்கர்கள் விமர்சனம் செய்கின்றனர்.