தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த மாதம் கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்துகொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால். எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்த தாமாக முன் வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு அதிகாரிகளை தயாராக இருக்குமாறும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.