மனைவியை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் நால்ரோடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனும் காளீஸ்வரியும் சேர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில் காளீஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் மணிகண்டன் காளீஸ்வரியை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மணிகண்டனுக்கும் காளீஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் துண்டால் காளீஸ்வரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் காவல் நிலையத்தில் தான் காளீஸ்வரியை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனைவியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்த மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.