இப்போதெல்லாம் நிறையப் பேர் வங்கிக்கே செல்வதில்லை. காரணம், ஸ்மார்ட்போன் மூலமாகவே வங்கிச் சேவைகளை எளிதாகப் பெறமுடிகின்றது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கோ இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. வீட்டிலிருந்தே ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். இதுபோன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது நமக்கு பெரும் உதவியாக இருந்தாலும் இதில் சில பாதகமான விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றது.
உதாரணமாக, நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் நமக்கே தெரியாமல் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, பணம் அனுப்ப வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேராமல் ஆன்லைன் மோசடி கும்பல்களிடம் சிக்கிவிடுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் பொதுவாகவே பாதுகாப்பானவை என்றாலும் வாடிக்கையாளர்களாகிய நாம் செய்யும் சிறு தவறால் மொத்தப் பணமும் காணாமல் போய்விடுகின்றது. இதனால் நிறையப் பேர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.
நமது மொபைல் நம்பருக்கு திடீரென ஒரு SMS வரும். அதில் ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால் பரிசு கிடைக்கும் என்பது போன்ற தகவல்கள் அதில் இருக்கும். அதை நம்பி நிறையப் பேர் தங்களது பணத்தை இழந்துவிடுகின்றார்கள். இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்களுடைய பணம் திரும்பக் கிடைத்துவிடும். மொத்த தொகையும் கிடைக்காவிட்டாலும் 90 சதவீதம் வரையில் கிடைத்துவிடும் என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞரான பவன் டக்கல் கூறியுள்ளார்.
ஜீ மீடியாவிடம் இதுகுறித்துப் பேசிய அவர், இவ்வாறு ஆன்லைனில் திருடுபோகும் பணம் அடுத்த 10 நாட்களில் திரும்பக் கிடைத்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குரிய சரியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணம் கிடைக்கும். இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கிக்கு உடனடியாக தகவல் கொடுத்து பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும். இதன் மூலமாக பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும்.