தாக்குதலில் காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 லட்ச ரூபாய் காசோலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் தெரசா பணியில் இருந்தபோது ஆறுமுகம் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மார்க்ரெட் தெரசாவை தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மார்க்ரெட் தெரசாவை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனைதொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் 5 லட்சத்திற்காக காசோலையை வழங்கியுள்ளார். அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சாந்தாராம், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் உள்பட பலரும் உடனிருந்தனர்.