தங்களது மண்ணில் உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதை ரஷ்யா உறுதி செய்து உள்ளது. அதாவது ரஷ்யாவிலுள்ள ஒரு கிராமத்தில் உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 2 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், பல வீடுகளை சேதப்படுத்தியதாகவும் ரஷ்ய பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்து உள்ளார். ரஷ்ய நாட்டின் Belgorod பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவரின் சமூகவலைதளம் பதிவில் “ஒரு கிராமம் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சுக்கு இலக்கானது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பொதுமக்கள் இருப்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது “இந்த சம்பவத்தில் ஆண் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டதுடன் ஒரு பெண்ணின் கழுத்திலும் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே வந்துவிட்டது. தாக்குதலில் பல்வேறு வீடுகள் பகுதியளவு சேதத்தை சந்தித்து இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். முன்பே ரஷ்யாவில் 2 இடங்களில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி, அது உக்ரைன் நடத்திய தாக்குதலா என கேள்வி எழுந்த சூழ்நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.