கடன் கொடுத்த பேராசிரியரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, அயனாவரத்தில் வசித்து வருபவர் 60 வயதுடைய பேராசிரியர் ஒருவர். இவர் தரமணியில் இருக்கின்ற மத்திய அரசின் தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ராதா என்பவருக்கு 4 1/2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் ராதா அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால் அவர் மீது 2019 -ஆம் வருடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இத்தகவலை அறிந்த ராதா தொலைபேசி மூலம் பேராசிரியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்பின் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி கொடுங்கையூரில் இருக்கின்ற தனது தோழி புஷ்பா வீட்டிற்கு பேராசிரியரை அழைத்துள்ளார். இதை நம்பிய பேராசிரியர் அங்கு சென்றபோது குடிநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.
இதனால் மயங்கிய பேராசிரியரை ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக்கி லட்சுமி என்ற பெண்ணுடன் இணைத்து வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அதன்பின் இந்த வீடியோவை காட்டி மிரட்டி இனிமேல் பணத்தை திரும்பக் கேட்டால் இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவேன் என்று பேராசிரியரிடம் ராதா கூறினார்.
இது குறித்து பேராசிரியர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராதா, அவரது தோழி 49 வயதுடைய புஷ்பா, இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரத்தில் வசித்த 30 வயதுடைய லட்சுமி, அவருடைய கணவர் 40 வயதுடைய முருகன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்