கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு செனாப் நதியில் ரூ.4,500 கோடிக்கும் அதிகமான செலவில் 540 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம், ரூ.5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இரு நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதற்கும், அவர் ஜம்மு-காஷ்மீர் சென்றதற்கும் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது முதல் இந்தியா காஷ்மீரில் உள்ள உண்மையான பிரச்சனை என்ன ? என்பதை திசைதிருப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பயணம் காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுவதாக பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான தந்திரமே ஆகும். அதேபோல் பிரதமர் மோடி 1960ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி இரு நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.