லண்டனில் ஒரு வீட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத்வார்க் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக அருகில் இருந்தவர்களால் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அங்கு 4 பேர் கடுமையான கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் இருந்ததாகவும், அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும் போலீசார் இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும், அவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதான சந்தேக நபருக்கு கொலை செய்யப்பட்ட நால்வரையும் ஏற்கனவே தெரியும் என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.