ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் லிஜின்(30). இவர் பீச் சாலை சந்திப்பில் உள்ள மூன்று தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் சப் ஜெயில் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது ஜவுளிக்கடை முதல் தளத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது தளத்தில் தனியார் வங்கி அமைந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் போல் லிஜின் துணி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கடையிலிருந்து புகை வருவதை பார்த்த பொதுமக்கள் லிஜினுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி பெனட்தம்பி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த துணிகள் அனைத்தும் எரிந்து நாசமானதால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்திற்கு வந்து தீயை அணைத்ததால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தளத்தில் உள்ள வங்கிக்கு, பக்கத்தில் உள்ள கடைக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் கோட்டார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டபோது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்கள். ஆனாலும் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தை நேரில் சென்று மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா ஆகியோர் பார்வையிட்டனர்.