மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வயலோகம், வேலம்பட்டி, முதலிப்பட்டி, நிலைய பட்டி, மாங்குடி, அகரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வித அறிவிப்பும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் பொதுமக்கள் பகல் நேரங்களில் பணி செய்ய முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துணைமின் நிலைய அலுவலகம் முன்பு தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 3 வாலிபர்கள் மின் நிலைய அலுவலக வளாக சுவற்றில் தலைகீழாக நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டை சரி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.