குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அக்கட்சியாகுளம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் பிரகதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகதீஸ்வரன் தனது நண்பர்களான மணிகண்டன், வினோத், வெங்கடேசன் ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள ராசா குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரகதீஸ்வரன் மலை உச்சியில் இருந்து குளத்து தண்ணீரில் குதித்துள்ளார். இதனை அவரது நண்பர்கள் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக வீடியோ எடுத்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக பிரகதீஸ்வரன் நீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பிரகதீஸ்வரனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த குளமானது கல்குவாரியாக இருந்து பாறைகள் தோண்டி எடுக்கப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குளமாக மாறியுள்ளது. இதனால் பிரகதீஸ்வரனை மீட்க முடியவில்லை. இதனையடுத்து நேற்று மீண்டும் தீயணைப்பு வீரர்கள் பிரகதீஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி பிரகதீஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரகதீஸ்வரனின் நண்பர்கள் எடுத்த வீடியோ காட்சியை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வீடியோவில் மலையின் உச்சியில் இருந்து முதலில் ஒருவர் குதிப்பதும், பின்னர் பிரகதீஸ்வரன் குதிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.