Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசிரியைக்கு வந்த குறுஞ்செய்தி…. மர்ம நபர்களின் நூதன திருட்டு…. சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு….!!

ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள எரிச்சி பகுதியில் வசித்து வரும் விஜிகித்தேரி(49) என்பவர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்ட இணையத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது 1% வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாக இருந்தது. இதனைப் பார்த்த விஜிகித்தேரி அதில் இருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு பேசியுள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் விஜிகித்தேரியின் விவரங்களை தெரிந்து கொண்டு அவருக்கு 5 லட்சம் வரை கடன் வழங்கவுள்ளதாக கூறினார். இதனை நம்பிய விஜிகித்தேரி, மர்மநபர் கேட்ட வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்டவற்றை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார். மேலும் கடன் வழங்குவதற்கு முன் பணமாக 1 லட்சத்தி ஆயிரம் ரூபாயை மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து பணம் செலுத்தி வெகு நாட்களாகியும் அந்த மர்ம நபர் கூறிய கடன் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர் இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவை வைத்து விசாரித்ததில் அந்த முகவரி டெல்லியை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் மர்மநபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |