கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கொள்கை விளக்கம் குறித்து அமைச்சர் சி வி கணேசன் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த ரூபாய் ஒரு லட்சம் தொகையானது ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித் தொகையான ரூபாய் 6,000 லிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவி தொகை ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்புகளை வீட்டில் இருந்து படிப்பதற்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகையானது ஆண்களுக்கு 3000 ஆகவும், பெண்களுக்கு 5000 வழங்கப்பட்டு வந்தது. இனி இந்த உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் சுமார் 3000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.