கர்நாடகா மாநிலத்திலுள்ள தக்சின கன்னடா மாவட்டத்தில் கிராம வாசிகள் 9 பேர் பழங்குடி பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெத்தலகண்டி தாலுக்காவைச் சேர்ந்த குரிபல்லா எனும் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, கிராமத்தைச் சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுனா, குஸ்மா, லோகய்யா, அணில், லலிதா, சென்னகேசவா போன்றோர் மீது 35 பழங்குடி பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் அப்பெண்ணை தாக்கி அவரது உடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியதோடு, அதனைப் படம் பிடித்தும் துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த பழங்குடி பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலத்தை இவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பெண் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருவாய்துறை அலுவலர்கள் சென்று நிலத்தை அளக்க முயன்றுஉள்ளனர். அந்த அரசு அதிகாரிகளை செயல்படவிடாமல் அந்த 9 பேர் தடுத்துள்ளனர். அடுத்ததாக அந்த அதிகாரிகளை வெளியேற்றிய பிறகு, பழங்குடி பெண் மீது இந்த கொடூர தாக்குதலை இவர்கள் அரங்கேற்றியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மற்றும் மூத்த சகோதரியும் தாக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.