ஆறு வயதில் காணாமல் போன பஞ்சன் லாமா சீனாவில் சாதாரண குடிமகனாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமா கடந்த 1995ஆம் ஆண்டு கெதுன் சோக்கி நைமா என்ற 6 வயது சிறுவனை 11வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்தார். இவர் இரண்டாவது புத்த மதத் தலைவர் என்று அழைக்கப்படுவார்.
இதற்கிடையில் நைமா என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே காணாமல்போனார். பின்னர் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது மட்டுமின்றி சிறுவனையும் அவரது குடும்பத்தாரையும் சீன அரசு கடத்தியதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில் சீனா அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் நைமாவின் 33வது பிறந்த நாளான நேற்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” ஆறு வயதில் சீனா அதிகாரிகளால் கடத்தப்பட்ட பஞ்சன் லாமாவை திபெத்திய சமூகம் அணுகுவதற்கு சீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும் நைமாவின் நல்வாழ்வு மற்றும் இருப்பிடம் குறித்து பொது வெளியில் அறிவிக்குமாறு சீனா அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் இந்த அறிக்கையினை கண்டித்து சீன வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” அமெரிக்கா இது தொடர்பான பிரச்சினைகளையும் , மத சுதந்திரத்தை மறைமுகமாக பயன்படுத்துவதையும், சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் நைமா ஒரு சாதாரணக் குடிமகனாகவே தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் தாங்கள் தொந்தரவு செய்வதை விரும்பவில்லை. அதனால் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக இழிவான அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு அவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.