Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமுகை வனப்பகுதியில்…குட்டியுடன் இறந்து கிடந்த காட்டு யானை… வனத்துறையினர் விசாரணை…!!!

குட்டியுடன் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, வனக் கோட்டத்தில் உள்ள சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக நடமாடுகின்றது. தற்சமயம் அந்த வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் உணவு, நீர்நிலைகளை தேடி காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் வேறு இடத்திற்கு கடந்து செல்கின்றன.

இந்நிலையில் சிறுமுகை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர், கடந்த 24-ஆம் தேதி சிறுமுகை வனச்சரகம், மோதூர், பெத்திக்குட்டை, காப்புக்காடு, இரட்டை கண் பாலம் சரக வனப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பவானிசாகர் அணை பகுதியில் 20 வயது மதிப்புள்ள பெண் காட்டு யானை ஒன்று கருசிதைந்த நிலையில் குட்டி யானையுடன் இறந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர், சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர், அரசு வன கால்நடை மருத்துவர் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் காலை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், அரசு கால்நடை மருத்துவர் சுகுமாரன், கால்நடை மருத்துவர் தியாகராஜன், சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குட்டி யானையுடன் இறந்து கிடந்த காட்டு யானையை பார்வையிட்டனர்.

அதன்பின் அரசு கால்நடை மருத்துவர் சுகுமாரன் தலைமையில், பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து சுகுமாரன் பேசியதாவது, யானைக்கு பிரசவம் ஏற்படும் போது சிக்கல் ஏற்பட்டதால் வயிற்றிலிருந்த குட்டி யானையுடன் சேர்ந்து யானையும் இறந்துள்ளன. இந்த பெண் யானை நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளது. மற்ற யானைகளுடன் சண்டை போட்டதற்கான  எந்த காயமும் ஏற்படவில்லை. யானை உயிரிழந்து இரண்டு தினங்கள் இருக்கும்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் யானை இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியும் என்று அவர் தெரிவித்தார். இந்த சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு ரத்தசோகை எனப் பல நோய்கள் வந்து தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருவதால் வன ஆர்வலர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசவத்தின் போது குட்டி யானையுடன் தாயும் இறந்ததால் வன ஆர்வலர்கள், அந்த பகுதி பொதுமக்கள்  சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |