ஈரோடு மாவட்டம் பவானி அருகில் ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(42). எம்.பி.ஏ பட்டதாரி ஆன இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவர் வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த பச்சையப்பன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார். இதையடுத்து பச்சையப்பன் 2-வது திருமணம் செய்துகொள்வதற்காக திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது விவாகரத்தான பெண் (அல்லது) கணவரை இழந்த பெண் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்.
இதனை பார்த்து பச்சையப்பனை தொடர்புக்கொண்ட சென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தன் தங்கை ராஜேஸ்வரி கணவரை இழந்தவர் என்றும், அவருக்கு உங்கள் போட்டோ மற்றும் விபரங்களை காண்பித்ததில் பிடித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளுமாறு பச்சையப்பனிடம் பேசியுள்ளார். இதற்கு சம்மதித்த பச்சையப்பன் கனடாவிலிருந்து கொண்டே செந்தில் மற்றும் அவரது தங்கை ராஜேஸ்வரியிடமும் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது வீடியோ அழைப்பில் பேசஅழைத்த போதெல்லாம் தன் குடும்பத்தினர் கண்டிப்பானவர்கள் என்பதால் வீடியோ அழைப்பு எல்லாம் வேண்டாம் என ராஜேஷ்வரி கூறிவிடுவார்.
இதனிடையே பச்சையப்பனிடம் பேசிய செந்தில், அவ்வப்போது தன் தங்கையின் தேவைக்கு மற்றும் குடும்பத்தேவைக்கு என பணம் வாங்கி வந்துள்ளார். அத்துடன் பச்சையப்பன் அந்த பெண்ணுக்காக லட்சக்கணக்கான மதிப்புடைய பரிசுப் பொருட்களையும், நகைகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார். அப்பெண்ணை சந்திப்பதற்காக 3.60 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு சென்ற மாதம் 23ஆம் திகதி சென்னை வந்த பச்சையப்பன், மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அப்போது செந்திலை தொடர்புகொண்ட பச்சையப்பன், உங்கள் தங்கையை அழைத்துக்கொண்டு ஹொட்டலுக்கு வருமாறும், அவருக்கு பல பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் செந்தில் மட்டும் பச்சையப்பனை பார்க்க சென்றுள்ளார்.
அதன்பின் செந்தில் தன் தங்கைக்கு உடல்நிலை சரியில்லாததால் சந்திக்க முடியாது என்று பச்சையப்பனிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக தன் தங்கைக்கு வாங்கிவந்த பரிசுப் பொருட்களை தன்னிடம் கொடுக்குமாறும் அவர் கேட்டுள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த பச்சையப்பன், ராஜேஸ்வரியை நேரில் சந்தித்துதான் பரிசுப் பொருட்களை கொடுப்பேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதனை தொடர்ந்து கோபமடைந்த செந்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி 3.60 லட்சம் மதிப்புடைய நகைகள், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பச்சையப்பன் புகார் எதுவும் கொடுக்காமல் கனடாவுக்கு சென்று விட்டார்.
இதனிடையில் பச்சையப்பன் குடும்பத்தினரும் அவரது மனைவி வித்யா குடும்பத்தினரும் தம்பதிக்கிடையே பேசி சமரசம் செய்துள்ளனர். இதன் காரணமாக தன் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து விவாகரத்து வழக்கையும் பச்சையப்பன் திரும்ப பெற்றுள்ளார். இந்நிலையில் செந்தில் தன் தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி தன்னிடம் 1.38 கோடி ரூபாய் பணமும் பொருட்களையும், கடந்த மாதம் சென்னை வந்தபோது தன்னிடம் இருந்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கத்தியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டதாகவும் பச்சையப்பன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின்படி காவல்துறையினர் செந்திலை கைது செய்தனர்.
அப்போது விசாரணையில் செந்திலுக்கு கணவரை இழந்த தங்கையே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதன்பின் பச்சையப்பனிடம் அவர் அபகரித்துச்சென்ற பரிசுப்பொருட்களை காவல்துறையினர் மீட்டனர். மேலும் பச்சையப்பனிடம் மோசடி செய்த பணத்தை மீட்கும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கைதாகியுள்ள செந்தில் பிரகாஷ் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவர் பங்குச் சந்தையில் முதலீடுசெய்து நிறைய பணத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. அதனை சரிகட்ட பச்சையப்பனிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆகவே செல்போன் பேச்சை கேட்டும், பெண்ணின் புகைப்படத்தை மட்டும் பார்த்தும் உண்மை என நம்பி பணத்தை இழந்த இச்சம்பவத்தை அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.