கோடநாடு வழக்கு தொடர்பாக ஐ.ஜி சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் வருடம் ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்களும், முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கேரளாவில் வசித்த சதீசன், மனோஜ், சயான், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரையும் கோத்தகிரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தமான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017-ஆம் வருடம் ஏப்ரல் 28-ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்துள்ளார்.
கோடநாட்டில் கொள்ளை, கொலை குறித்து முழு விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 200-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அவருடைய மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் காவல்துறையினர் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அதிமுகவின் நிர்வாகியுமான சஜீவனிடம் விசாரணை மேற்கொள்ள தனிப்படை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சஜீவனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதனை தொடர்ந்து சஜீவன் கோவை பி.ஆர்.எஸ் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனிப்படை முன் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு ஆஜராகிய நிலையில் அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொலை, கொள்ளை சம்பவம் நடக்கும்போது சஜீவன் துபாயில் இருந்ததாக கூறினார். அதனால் அவர் எதற்காக துபாய் சென்றார்.
கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருக்கின்றதா என பல கேள்விகளை தனிப்படையினர் எழுப்பியுள்ளனர். சஜீவன் நீலகிரி மாவட்டம் கூடலூர், கோவை போத்தனூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகின்றார்.