வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே காவிரி நகர் பகுதியில் பொன்னம்பலம்- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பொன்னம்பலம் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மூத்த மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனையடுத்து 2-வது மகளும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் பஞ்சவர்ணம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மூத்த மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
இதனால் வீட்டை பார்த்து கொள்ளும்படி நடராஜன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணத்தின் பக்கத்து வீட்டில் 3 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பஞ்சவர்ணம் நடராஜனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி நடராஜனும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜன் பஞ்சவர்ணத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே பஞ்சவர்ணம் சென்னையில் இருந்து வீட்டிற்கு கிளம்பி வந்துள்ளார்.
இவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள், 5 தங்க கடிகாரங்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து 2,20,000 ரூபாய் பணம், 5 பட்டு புடவைகளும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பஞ்சவர்ணம் பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.