பாகிஸ்தான் நாட்டின் பல்கலைகழகத்தின் வாசலுக்கு அருகில் பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சீனாவை சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்னும் கிளர்ச்சிகுழு இயங்கி வருகிறது. பாகிஸ்தான் அரசு, இந்த குழுவை பயங்கரவாத குழுவாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படை மற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவருகிறது.
இதனிடையே கராச்சி நகரத்தில் இருக்கும் கராச்சி பல்கலைகழகத்தில் சீன மொழியை கற்றுக்கொடுக்கக் கூடிய கன்பூசியஸ் கல்வி அமைப்பு இயங்கி வருகிறது. இதில் சீன நாட்டின் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இம்மையத்திற்கு வாகனத்தில் சீன ஆசிரியர்கள் சிலர் நேற்று வந்திருக்கிறார்கள்.
அப்போது, வாசலுக்கு அருகில் பர்தா அணிந்து கொண்டு நின்ற பெண் ஒருவர் வாகனம் வந்ததும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தார். இந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீன நாட்டை சேர்ந்த 3 நபர்களுடன் அந்த பெண்ணும் உயிரிழந்தார். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
Video of the bomb blast #Karachi by #balochliberationarmy The brutal blast take place near the University of #Karachi. 3 Chinese national killed in the attack. pic.twitter.com/K36LN23Jpx
— Sezal Chand Thakur (@imSCthakur) April 27, 2022
இத்தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவ அமைப்பு பொறுப்பேற்றதோடு தாக்குதல் நடத்திய பெண் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஷரி பலோச் (எ) பரம்ஷா என்னும் 30 வயதுடைய பெண் தான் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளார்.
அவர் விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது அதில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். அறிவியல் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவரின் கணவர் மருத்துவராக இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.