ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகராட்சியில் அமைந்துள்ள 26-வது வார்டில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை அகற்ற வந்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தாசில்தார் சிவகார்த்திகேயன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டு ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். அப்போது மக்கள் கதறி அழுத காட்சி பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் இவர்களுக்கு நாளை மாற்று இடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.