கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர். இவர் “மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி” என்ற பெயரில் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கணக்கில் அவருடைய பணிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்து வருவார். கலெக்டரிடன் நண்பர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இந்த கணக்கை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் மாவட்ட கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கலெக்டரின் டுவிட்டர் கணக்கை யாரோ மர்ம நபர் ஹேக் செய்து விட்டனர் என்று நினைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அதன்பின் மாலை 5 மணி அளவில் அந்த விளம்பரம் டுவிட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது, கலெக்டரின் டுவிட்டர் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை. வழக்கமான தகவல்கள் அதில் வர தான் செய்கிறது. இதற்கிடையில் கிரிப்டோ கரன்சி என்ற விளம்பரம் அதில் தவறாக வந்தது. அந்த விளம்பரத்தை வெளியிட்ட மர்ம நபர் யார்? என்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.