மகனை கொன்று பிணத்தை வாய்க்காலில் வீசி காணாமல் போனதாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகில் திங்களூர் நிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி காளியப்பன்(76). இவருடைய மனைவி பாவாயாள். இவர்களுக்கு ஒரே மகன் 42 வயதுடைய பெரியசாமி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த பெரியசாமியை கடந்த 19 ஆம் தேதி அன்று முதல் காணவில்லை.
இதுதொடர்பாக காளியப்பன் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து பெரியசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் பெரியசாமி வீட்டின் அருகில் கீழ்பவானி வாய்க்காலில் ஒரு சாக்கு மூட்டை மிதந்தது. அந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதை பார்த்த பொதுமக்கள் சந்தேகமடைந்து திங்களூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் இருந்தது. இதையடுத்து போலீசார் அது காணாமல் போன பெரியசாமியாக இருக்கலாம் என்று கருதி அவருடைய தந்தை காளியப்பனை கூட்டிச் சென்று அடையாளம் காட்ட சொன்னார்கள். அப்போது காளியப்பன் சாக்கு மூட்டையில் பிணமாக இருந்தது தனது மகன் பெரியசாமி தான் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் காவல்துறையினர் அந்த பிணத்தை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் காளியப்பன் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காளியப்பன் அளித்த பரபரப்பு வாக்குமூலம், சம்பவத்தன்று காலை பெரியசாமி என்னிடம் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டபோது நான் பணம் கொடுக்கவில்லை.
அதற்கு பெரியசாமி சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்ட நிலையில் மீண்டும் அன்று இரவு பெரியசாமி என்னிடம் வந்து பணம் கேட்டார். அப்போதும் நான் பணம் கொடுக்கவில்லை என்பதால் எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து என்னை அடிக்க முயன்ற போது நான் சுதாரித்துக்கொண்டு அவரிடம் இருந்த கடப்பாறையை பிடிங்கி அவரை அடித்து விட்டேன்.
அதன் பின் அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து பெரியசாமி தலையில் அடித்த போது அவர் வலியால் அலறி துடித்து அருகில் கிடந்த கல்லின் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின் அந்தக் கொலையை மறைக்க நான் பெரியசாமியின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி தோளில் சுமந்து கொண்டு கீழ்பவானி வாய்க்காலில் வீசி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு என் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக மகனை காணவில்லை என புகார் கூறி நடித்தேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் காவல்துறையினர் வழக்கு பதிந்து காளியப்பனை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சபீனா பேகம் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெருந்துறை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.