லாரி-வேன் நேருக்கு நேர் மோதியாதில் டிரைவர் உள்பட தொழிலாளர் சங்கத்தினர் என 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூர் சுங்கசாவாடியை மாற்ற வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(64), பாலசுப்பிரமணி(45), வீரபாண்டி (42), குருசாமி(37), பழனிசாமி(53), மாடசாமி (30), முருகன்(54), சந்தன குமார்(34), இசக்கிமுத்து(32), மாயக்கண்ணன்(37), ஸ்ரீராம்(27), பழனிசெல்வம்(41), முருகன்(52), மதுசூதனன்(43) ஆகியோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வேனில் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை வீரபாண்டி(31) என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அந்த வேன் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக வேனுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் 2 வாகனங்களுக்கு சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் லாரியில் இருந்த ஓட்டுனர் தர்மபுரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் வேனில் இருந்த டிரைவர் உள்பட மொத்தம் 16 பேர் பலத்தகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற டி.கல்லுப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாலையில் கிடந்த 2 வாகனங்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.