Categories
டென்னிஸ் விளையாட்டு

கண்ணீரோடு வெளியேறிய 15 வயது வீராங்கனை கோகோ; ரசிகர்கள் சோகம்!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தோல்வியடைந்தார்.

2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டியில் 15 வயது நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபை எதிர்த்து அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின் ஆடினார்.

முன்னதாக நடந்த மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகாவை, கோகோ வீழ்த்தியிருந்ததால், இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரை கோகோ கைப்பற்றுவார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் இன்றையப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்தப் போட்டியின் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக ஆடியதால் 6-6 என்ற நிலை வந்தது. இதையடுத்து நடந்த டை ப்ரேக்கரை 7-5 என கெனின் கைப்பற்றி, முதல் செட்டை 7-6 என வென்று அசத்தினார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட்டை 6-3 எனவும், மூன்றாவது செட்டில் 6-0 எனவும் கெனின் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின்

அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின்

இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து கோகோ காஃப் வெளியேறினார். இந்த கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கோகோ கைப்பற்றியிருந்தால், சிறுவயதிலேயே ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.

Categories

Tech |