சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன் புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை 10 கிலோ மீட்டருக்கு லாரி டிரைவர் தூக்கிச்சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குத்தி சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று சுங்கக் கட்டணம் செலுத்தாமல் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அகமதாடு சுங்கச்சாவடிக்கு அந்த லாரி வந்தால் நிறுத்தும்படி ஊழியர்களுக்கு போன் செய்து தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசன் லாரியின் முன் புற கேபின் மீது ஏறி நின்று நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரியின் முன் பகுதியில் சீனிவாசன் ஏறிய போதும் லாரி டிரைவர் அதனை கண்டுகொள்ளாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதைக்கண்டு உஷாரான சுங்கச்சாவடி ஊழியர்கள் நான்கு பைக்குகளுடன் லாரியை துரத்திச் சென்று நெடுஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 10 கிலோ மீட்டருக்கு லாரி சென்ற நிலையில் சுங்கச்சாவடி அருகே லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு ஊழியர் சீனிவாசனை மீட்டனர். லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.