தனது வீட்டிற்கு கரண்ட் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு பெண் மகள், மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகில் பூசாரிபாளையத்தில் வசித்து வருபவர் சுந்தரம். இவர் மனைவி நதியா. இவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கின்ற ஒரு மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் நதியா நேற்று காலை தனது மகள், மகனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த நிலையில், அவர்கள் 3 பேரும் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். உடனே காவல்துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன்பின் அவர்கள் 3 பேரும் கலெக்டரை சமீரனை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, நான், எனது மகன், எனது மகளுடன் கடந்த 9 வருடங்களாக நத்தம் புறம்போக்கு இடத்தில் தகர கொட்டகை அமைத்து வசித்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை கரண்ட் வழங்கப்படவில்லை. எனது மகளும், மகனும் படிப்பதால் இரவு நேரத்தில் கரண்ட் இல்லாமல் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
எங்களுடைய வீட்டிற்கு மின்சாரம் கேட்டு விண்ணப்பம் செய்தற்கு மின்வாரிய அதிகாரிகள் கரண்ட் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இது குறித்து நான் ஏற்கனவே தங்களிடம் மனு கொடுத்துள்ளேன். எனவே எங்களது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்ற கலெக்டர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.