குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி ரமேஷ் அவரது நண்பர்களான சிம்சன் மற்றும் கென்னடி ஜோஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரமேஷ் குளத்தில் தவறி விழுந்து உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேகம் மரணத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ரமேஷ், சிம்சன், கென்னடி ஜோஸ் ஆகிய 3 பேரும் படிக்கட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ரமேஷ்க்கு போதை அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக ரமேஷுக்கு போதையை தெளிய வைக்க வேண்டும் என்பதற்காக சிம்சன் மற்றும் கென்னடி ஜோஸ் ஆகிய 2 பேரும் குளத்திற்குள் ரமேஷின் தலையை முக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த நண்பர்கள் 2 பேரும் குளத்திற்குள் ரமேஷின் சடலத்தை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் கென்னடி ஜோசை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிம்சனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.