வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் ரெட்டனையில் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த 350-க்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல இருந்த பாதை துண்டிக்கப்பட்டதால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். உடனே அங்கிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் இல்லை. இதனை அடுத்து அலுவலகத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடத்தை உள்ளே செல்லவிடாமல் தடுத்து பிரச்சனை செய்தார்கள்.
அதன் பின்னர் இத்தகவலை அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன் உரிய நடவடிக்கை எடுக்க கூறி இருப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரி அவர்களிடம் தெரிவித்தார். மேலும் பிரச்சனை உள்ள அந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட வருவார்கள் என்று உறுதி கொடுத்தார். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.