Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரம் வேணுமா….. “ரூ 2,500 லஞ்சம் கொடு”… வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி..!!

ரூ 2500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள்(63). இவர் வந்தவாசி காந்தி ரோட்டில் உள்ள வீட்டு வசதி சங்கத்தில் கடந்த 1997-ஆம் வருடம் வீட்டு பத்திரத்தை  அடமானம் வைத்து  ரூ 70,000 கடனாக வாங்கி உள்ளார். கடந்த 2012ஆம் வருடம் பெருமாள் கடனை திருப்பி செலுத்தி உள்ள நிலையில், அடமான பத்திரம், தடையில்லா சான்றை அவர் கேட்டிருந்தார். ஆனால் அலுவலக அதிகாரிகள் அதைக் கொடுக்காமல் அலைகழித்தனர்.

இந்நிலையில் அடமான பத்திரம், தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ 2500 லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று அலுவலக உதவியாளர் சின்னராஜ்(53) கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத பெருமாள் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ 2500-யை பெருமாளிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

இதனை அடுத்து பெருமாள் சின்னராஜிடம் பணத்தை கொடுக்கின்ற போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் லஞ்சம் வாங்கிய சின்னராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

Categories

Tech |