பாலியல் தொழிலாளர்களுக்கு தனியாக தபால் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எவ்வளவு மேம்பாடுகள் வளர்ச்சி ஏற்பட்டாலும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை தற்போது வரை மிகவும் மோசமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள காமத்திபுரா பகுதி பாலியல் தொழிலாளர்கள் அதிக அளவு வாழும் இடம். அங்கு பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
இருந்தாலும் அங்கு வாழும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகவே உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அந்தப் பகுதியில் ஒரு தபால் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அந்த தபால் அலுவலகத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் எதுவும் இல்லை.
அதனால் அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே அப்பகுதியை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் கார்டு வழங்கும் பணியில் அப்பகுதியில் உள்ள தபால் அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. அந்தத் தபால் அலுவலகத்தில் இதுவரை 1,700 க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலியல் தொழிலாளர்களுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் முதலீடு, சிறுசேமிப்பு,டெபாசிட் மற்றும் பென்ஷன் திட்டங்கள் போன்றவை பற்றி பாலியல் தொழிலாளர்களுக்கு தபால் அலுவலகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இது பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.