இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக ரேஷன் கார்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கு அன்றாட தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன் அனைத்து அரசு நலத் திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியம். தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்தத் திட்டம் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர் அல்லது வெளி மாநிலத்திற்கு சென்றால் அங்குள்ள ரேசன் கடைகளில் சுலபமாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த நிலையில் ரேஷன் கார்டில் புதிய விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறையின்படி ரேஷன் கார்டுதாரர்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் பயனுள்ள நபர்களுக்கு உணவுப்பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் தகுதியான நபர்களுக்கு பதிலாக வேறு ஒரு நபர் பெற்றுக்கொண்டு சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தடுப்பதற்காக இந்த புதிய விதிமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இந்த முறை அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறை முதற்கட்டமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இதையடுத்து இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யாரும் மோசடி செய்ய முடியாது, தகுதியுடைய மக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் சென்றடையும்.