தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 550 கோவில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை (ஸ்வைப்பிங் எந்திரம்) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் இணை கமிஷனர்களிடம் வழங்கினார். இதில் கமிஷனர் ஜெ.குமரகுருபரன் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசியதாவது “550 கோயில்களில் பக்தர்கள் எளிதில் பயனடையும் அடிப்படையில் கோயில் சேவைகளுக்கு இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், கட்டண சீட்டு மையங்களில் கணினி மூலமாக ரசீதுகள் பெறுவதற்கும் இந்துசமய அறநிலையத்துறையின் வலைதளத்தில் (www.hrce.tn.gov.in) வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இணைய வழியிலும், கட்டணச்சீட்டு மையங்களில் கணினி வாயிலாக வழங்கப்படும் ரசீதுகளில் விரைவு குறியீடு அச்சிடப்பட்டு இருக்கும்.
இதனிடையில் சேவைகளை முன்பதிவு செய்யும் வசதியை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் மற்றும் கட்டண சீட்டு மையங்களில் கூட்டத்தை தவிர்க்கவும் 1,500 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடையாளமாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 22, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசாமி கோயிலுக்கு 4, திருவொற்றியூர் தியாகராஜசாமி கோயிலுக்கு 8, வடபழனி முருகன் கோயிலுக்கு 5, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு 6 மற்றும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு 5 என்று மொத்தம் 50 கையடக்க கருவிகள் (ஸ்வைப்பிங் எந்திரம்) வழங்கப்பட்டுள்ளது. அதாவது நேர்த்திக்கடன் செலுத்தும் போது தவறுகள் நடைபெறாமல் இருக்க அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகவே இத்திட்டம் அனைத்து கோயில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இந்த கையடக்க கருவிகளில் இரண்டு சிம்கார்டுகளை பொருத்தலாம்.
அதன்பின் பக்தர்களிடம் சேவைக்கான கட்டணத்தை ரொக்கமாக பெற்றுக் கொண்டு விரைவுகுறியீடு அச்சிடப்பட்ட ரசீது கொடுக்கப்படும். கூடியவிரைவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இச்சேவை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இந்துசமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்ட மென்பொருள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் அயோத்தியா மண்டபத்தை பொருத்தளவில் நீதிமன்றம் என்ன வழிகாட்டுதலை பிறப்பிக்கிறதோ அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்துசமய அறநிலையத்துறை செயல்படும். அடுத்தகட்ட நடவடிக்கையாக சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்து முதல்வரிடம் கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும். அதிகளவு பக்தர்கள் கூடுகின்ற தேர் திருவிழாக்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அத்துடன் வெளிநாடுகளில் மீட்கப்பட்டு அருங்காட்சியகங்கள் வைக்கப்பட்டுள்ள சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் சிலைகளை உரிய கோயில்களில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று அவர் கூறினார்.