போக்குவரத்து போலீஸ்காரரை ஒரு வாலிபர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் போக்குவரத்து போலீஸ்காரர் பிரகாஷ் (35). இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் படித்துறை இறக்கம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தனது பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடி செல்கிறார். அவரை உடனே பிடியுங்கள் என்று தெரிவித்தார். இதனை அடுத்து அந்த வாலிபர் தெரிவித்த பைக்கில் வந்தவரை பிரகாஷ் வழிமறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதனால் கோபமடைந்த அந்த நபர் பிரகாஷை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். அதன்பின் பதுங்கி வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டி பைக்கில் தப்பித்து செல்ல முயன்றுள்ளார். அப்போது சாமர்த்தியமாக பிரகாஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் சிதம்பரம் இடையன் பாலசேரியில் வசித்து வரும் ஜான்சன் என்பவருடைய மகன் அபினாஷ்(25) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.