வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-2 படிக்கும் வினோத்குமார் மற்றும் பிளஸ்-1 படிக்கும் தினகரன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வி எழுந்து தனது விட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வி உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து தூங்கி கொண்டிருந்த இரு மகன்கள் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினகரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த வினோத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.