பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணம், செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள துக்கியாம்பாளையம் பகுதியில் பேளூர் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 11-ஆம் தேதி எரிபொருள் விற்பனை செய்த ரூ.40 ஆயிரம் பணத்தை பெரிய பையில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பணம் மற்றும் ஒரு செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஊழியர்கள் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 2 பேர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் செம்மட்டையன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.