நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு பல மாநிலங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் நிலக்கரி தேவையான அளவில் தற்போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக சில தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன. டெல்லியில் குறைந்தது 21 நாட்களாவது நிலக்கரி கையிருப்பு இருக்கவேண்டும். ஆனால் ஒருநாளுக்கும் குறைவான அளவிலேயே நிலக்கரி உள்ளது. இதனால் மெட்ரோ மற்றும் மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படும் என்று அம்மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு அனல் மின் உலைகளுக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக 42 பயணிகள் ரயில்கள் நாடு முழுவதும் ரத்த செய்யப்படுகின்றது. இதனால் நிலக்கரியை கொண்டு செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக செல்லும். இதன் காரணமாகவே பயணிகள் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் ரயில்கள் ரத்து அறிவிப்பு தற்காலிகம் என்றும், நிலைமை சீரடைந்ததும் மீண்டும் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செயல் இயக்குனர் கவுரவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.