உலகில் உள்ள மீன் இனங்களில் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
உலகத்தில் உள்ள பலவகையான மீன் இனங்களில் அதிக விஷத்தன்மை கொண்டதாக பேத்தை எனப்படும் புப்பர் ஃபிஷ் உள்ளது. இந்த மீன் பேத்தை, பேத்தா, தவளை மீன், முள்ளம் பன்றி மீன் மற்றும் பலாச்சி மீன் என பல வகையான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த வகையான மீன் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மீனின் முக அமைப்பு மனித முகம் போன்று இருக்கும். இந்தவகையான பேத்தை மீன் ராமேஸ்வரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மீன் கடித்தவுடன் முதலில் உதடு மற்றும் நகங்களில் பாதிப்பு ஏற்படும். அதன்பின் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் செயலிழந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக இறந்து விடுவர். இந்நிலையில் பேத்தை மீன் வகையில் 120 இனங்கள் காணப்படுகிறது. இதன் ஒவ்வொரு வகையும் பல நிறங்களிலும், வித்தியாசமான உடல் அமைப்புடனும் காணப்படுகிறது.
இந்த மீன் ஜப்பானில் ஃபுகு என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பேத்தை மீன் எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னுடைய உடலை 10 மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும். இந்த பேத்தை மீன் உலகில் முதுகெலும்புள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட உயிரினங்களில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த பேத்தை மீனின் உடல் முழுவதும் நச்சுத் தன்மை இருக்கிறது. குறிப்பாக பேத்தை மீனின் தலையில் அதிக அளவு விஷம் இருக்கிறது. இதன் உடலில் பெட்ரோடோடோக்சின் என்ற நஞ்சு உள்ளது. இந்த நஞ்சு ஒரே நேரத்தில் 30 பேரை கொள்ளக்கூடியது. அதாவது சைனைடை விட 1,000 மடங்கு விஷத்தன்மை கொண்டதாகும்.
இந்த மீனின் நஞ்சை முறியடிப்பதற்கான எந்த ஒரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த அளவு நச்சுத்தன்மை கொண்ட பேத்தை மீன் ஜப்பானில் அதிக அளவில் விற்பனையாகிறது. இங்கு ஒரு வருடத்திற்கு 10,000 டன் பேத்தை மீன் மக்களுக்கு உணவாகிறது. இந்த மீனால் தயாரிக்கப்படும் உணவின் விலை இந்திய மதிப்பில் 14,000 ரூபாய் ஆகும். மேலும் ஜப்பானில் பேத்தை மீனை சமைப்பதற்கு தனி படிப்பு உள்ளது. இதற்காக 2 வருடங்கள் சிறப்பு பயிற்சியும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த பேத்தை மீனை சமைக்கும் போது ஏதேனும் தவறு செய்தால் அதுவே அவர்களுக்கு கடைசி உணவாகும்.