முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக போவதற்கு இயற்கை குறிப்புகள்:
பன்னீர் – எலுமிச்சைச் சாறு:
எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, கலந்து முகத்தில் பூசவேண்டும், அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
சந்தனம்:
சந்தன தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
ரோஜா மொட்டு:
ரோஜா மொட்டுக்களை சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.
வேப்பிலை:
வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. வேப்பிலையை கொழுந்தை, தண்ணீர் சேர்த்து, அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் , முகப்பருக்கள் நீங்கும்.
சோற்றுக்கற்றாழை:
சோற்றுக்கற்றாழையை சருமத்தில் தேய்த்து கொள்வதால் சருமம் மிருதுவாகும். கற்றாழையின் நடுப்பகுதியில் இருக்கும் சோற்றை எடுத்து, நீரில் நன்றாக கழுவியபின் சோற்றை கூழாக்கி முகத்தில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவி வரலாம். இது மிகசிறந்த கிருமி நாசினி ஆகும். முகத்தில் உள்ள பருக்களை போக்கிவிடும்.
பூண்டு:
வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிவிட்டு நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், முகப்பரு விரைவில் மறைந்து விடும்.
முகத்தில் போடும் ஃபேஸ் பேக்குகள்:
பப்பாளி மற்றும் ஆப்பிள் சாற்றை முகத்தில் பூசி வர வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்கு மசித்து, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் மறையும். வாரம் இரண்டு முறை இதைச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் பிறகு துடைக்கவும். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கிவிடும். பருத்தொல்லையும் அகலும்.