செங்கல்பட்டு அருகே பெரியார் சிலையை உடைத்த வழக்கில் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அடுத்த களியப்பட்டியில் சில நாட்களுக்கு முன் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சேதமடைந்த பெரியார் சிலை போலீசார் பாதுகாப்பில் சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் காஞ்சிபுரம் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பெரியார் சிலையை உடைத்த வழக்கில் பாமக முன்னாள் ஒன்றிய செயலர் கோ. தாமோதரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.