விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். காதலை எப்பொழுதும் அழகாகவும், வித்தியாசமாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் அதிலும் குறிப்பாக இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் தனது ஒவ்வொரு படங்களிலும் கவித்துவமாக காட்டிவரும் விக்னேஷ் சிவன் இந்த முறை காத்துவாக்குல 2 காதல் படத்தில் இரண்டு காதலை மையமாக வைத்து தயாரித்துள்ளார்.
மேலும் ஹீரோவாக இருக்கும் போதே குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் விஜய் சேதுபதி காதல் படங்களிலும் தன்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் காத்துவாக்குல 2 படத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் இளைஞனாக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விக்னேஷ் சிவனின் வழக்கமான படங்களைப் போலவே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வித்தியாசமாகவும் அனைவரும் ரசிக்கும்படி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தாவும் நடித்திருப்பதால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் சமந்தா மற்றும் நயன்தாரா என ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகள் உடன் விஜய் சேதுபதி நடித்திருப்பதை பார்த்த அவரது மனைவி நீங்க வாழ்ந்து இருக்கீங்க என கேலி செய்தாராம். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி உங்களுக்கு படத்துல பார்க்கும்போது வாழ்ந்த மாதிரிதான் தெரியும் ஷூட்டிங்கில் வந்து பார்த்தால்தான் புரியும்
வாழ்ந்தேனா இல்ல வறுத்தெடுத்தாங்களான்னு என்று விஜய்சேதுபதி பதில் அளித்திருக்கிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.