புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே மின்மயமாக்குதலுடன் இரண்டாம் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவடைந்த பணியை நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மோட்டார் டிராலி ஆய்வு செய்தார். இதனையடுத்தது நாகர்கோவிலில் இருந்து 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் ஆரல்வாய்மொழி ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ள 2-வது நடைமேடைக்கு வந்துள்ளது. அப்போது அதிகாரிகள் ரயிலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்துள்ளனர்.
இதையடுத்து ரயிலில் இணைக்கப்பட்ட 5 பெட்டிகளிலும் அதிகாரிகள் அமர்ந்து சோதனை ஓட்டம் செய்தனர். இதனால் தினந்தோறும் மாலை 5.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 7.15 மணிக்கும், மாலை 5.55 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 7.50 மணிக்கும் தாமதமாக சென்றுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர்.