யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி, பன்றிமலை, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழக்கம்போல் மலைப்பாதை வழியாக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அவர்களை காட்டு யானை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும் மலை பாதை ஓரத்தில் இருந்த பெரிய பாறையின் மீது ஏறியுள்ளனர்.
இதனையடுத்து யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.