வட்ட செயலாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வட்டச் செயலாளராக இருந்துள்ளார். இவர் கடந்த 1-ம் தேதி மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த விசாரணையின் போது விக்ரவாண்டி அருகே தனிப்படை காவல்துறையினரால் சஞ்சய், விக்னேஷ், கிஷோர், புவனேஸ்வர், விக்னேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அருண் உட்பட 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி முத்து சரவணன், முருகேசன் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது நிலத்தகராறு காரணமாக செல்வம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தி.மு.க துணை செயலாளர் உமா மகேஸ்வரன், தி.மு.க மீனவர் அணி அமைப்பாளர், ரியல் எஸ்டேட் தரகர் ரமேஷ், பத்திரப்பதிவு எழுத்தாளர் ஜெய முருகன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் உமா மகேஸ்வரன் வட்ட செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஜெயமுருகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டுள்ளார். இதில் தான் வெட்டப்பட்டதுக்கு செல்வம் காரணமாக இருக்கலாம் என ஜெயமுருகன் நினைத்துள்ளார். அதன்பிறகு டென்சி மற்றும் ரமேஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் தொழில் ரீதியாக செல்வம் இடையூறாக இருந்துள்ளார். இதன் காரணமாக 4 பேரும் சேர்ந்து ரூபாய் 40 லட்சம் பணத்தை முத்து சரவணனிடம் கொடுத்து செல்வத்தை கொலை செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து முத்து சரவணன் தனது கூலிப்படையுடன் சேர்ந்து செல்வத்தை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி தணிகாசலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதனால் கொலை வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்கில் இருந்த மர்மங்கள் அனைத்தும் விலகியதாகவும் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.