லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கிரசர் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த குவாரியில் இருந்து ஏராளமான லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றது. ஆனால் குவாரியில் மணல் ஏற்றும் லாரிகளுக்கு கனிம வளத்துறையில் பாஸ் பெற்று நடை சீட்டு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் அதிகாரிகள் அடிக்கடி லாரிகளை வழிமறித்து சோதனை செய்து லாரியை பறிமுதல் செய்வதோடு ஓட்டுநர் மற்றும் கிளீனரை கைது செய்கின்றனர். இதனால் லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை குற்றவாளியாக உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நடை சீட்டு வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிரசர் குவாரியின் மூலம் மணல் அள்ளும் லாரிகளுக்கு முறையான நடை சீட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனக்கன்குளம் நான்குவழிச்சாலை அருகே கடந்த 29-ஆம் தேதி முதல் 200-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி ஓட்டுநர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் சாலை மேம்படுத்துதல், கட்டுமானம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதால் அதிகாரிகள் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.