மத்திய அரசு 25 லட்சம் ரூபாய் லாட்டரி பரிசு வழங்குவதாக பரவி வரும் தகவல் குறித்து எச்சரித்துள்ளது.
ஜியோ நிறுவனமும், கோன் பனேகா குரோர்பதி என்ற நிறுவனமும் இணைந்து பரிசுப்போட்டி நடத்துவதாகவும், இதில் வெற்றி பெறுபவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது மோசடி கும்பல்களால் பரப்பப்படும் செய்தி என தற்போது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்து 25 லட்சம் ரூபாய்க்கு லாட்டரி நடத்தப்படுவதாக வெளியான தகவல் மோசடி கும்பல்களால் பரப்பப்பட்டது என்று பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே இதனை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “25 லட்சம் ரூபாய் வெற்றி பெற்றுள்ளதாக பலருக்கு மோசடிக் கும்பல்கள் மொபைல் அழைப்பு, இமெயில், மெசேஜ் என்று அனுப்பி வருகிறது. இதுபோன்று ஊழல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இதுபோன்று வரும் அழைப்புகள், இமெயில், மெசேஜ் போன்றவற்றிக்கு பதில் அளிக்க வேண்டாம். உங்களின் தனி நபர் விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்” என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.