தமிழகம் முழுவதும் நேற்று மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து,நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கன்குளம் ஊராட்சியில் மாவட்ட திட்ட அலுவலர் பழனிசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் ஒன்று நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதையடுத்து இந்த கூட்டம் தொடங்கியதும் ஊராட்சியின் வரவு -செலவு கணக்கானது தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பல்வேறு பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பிறகு, வடக்கன்குளம் பஞ்சாயத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அரசின் திட்டங்களை எவ்வாறு பெற வேண்டும் என்பது பற்றிய துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.
மேலும் இக்கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு சிறப்புரையாற்றியுள்ளார். அப்போது பேசியுள்ளதாவது, ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 360 கிராமங்கள் பயன்பெறும் நோக்கில், சுமார் 270 கோடி ரூபாய் மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இதற்கான திட்ட மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில்,ஓர் ஆண்டு காலத்திற்குள் இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு இந்த பகுதிக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும்.
மேலும் அதே போன்று வடக்கன்குளம் உள்ளிட்ட 2 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், 17½ கோடி ரூபாய் மதிப்பில் குத்தரபாஞ்சான் பகுதியில் உறைகிணறுகள், ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும். இதையடுத்து மக்களைக் காக்கும் மருத்துவம், இன்னுயிர் காக்கும் திட்டம், அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என மக்களுக்கான ஏராளமான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.
இதனைத்தொடர்ந்து ஊராட்சியில் குப்பைகளை எடுப்பதற்கான வாகனத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் ஜோசப்பெல்சி, பி.சி.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.