Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து விற்கப்படும் தடை செய்யப்பட்ட பொருட்கள்…. அபராதம் வசூலித்த அதிகாரிகள்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பது, சேமித்து வைப்பது, வினியோகிப்பது, விற்பது ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றது. ஆனால் மாவட்ட நிர்வாகத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.

இதனால் கடந்த 25-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 1.621 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதேபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |