Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருமூர்த்தி அணை பகுதியில் எல்லை மீறும் சுற்றுலா பயணிகள்”…. சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

திருமூர்த்தி அணை மற்றும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் எல்லைமீறி செல்வதால் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை இருக்கின்றது. இந்த அணை பகுதியில் சிறுவர் பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் ஆகியவை இருக்கின்றது. இங்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தில் உள்ளோரும் வெளிமாநிலத்தில் உள்ளோரும் வந்து சுற்றிப் பார்த்தார்கள். அப்போது பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சென்றார்கள்.

அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒருசிலர் வனப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளித்தார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட கம்பி வேலி வெள்ளப்பெருக்கின் போது அடித்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள் இதுவரை அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்காததால் அந்த பகுதி திறந்த வெளியாக இருக்கின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் எல்லை மீறி அணைக்குள் செல்கின்றார்கள். ஏற்கனவே ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் சில சுற்றுலா பயணிகள் குளிக்கின்றார்கள். இதனால் கம்பி வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

Categories

Tech |